ஸ்ரீ சுகர் கூறலானார்.

படைப்பின் தத்துவங்களில் முதலில் தோன்றியது அஹங்கார தத்வம். அதன் தலைவர் பரமேஸ்வரன். அது வைகாரிகம்,‌ ராஜஸம், தாமஸம் என்று மூவகையாகப் ‌பிரிகிறது.

மனம், செயற்புலன்கள் ஐந்து, அறிவுப் புலன்கள் ஐந்து, ஐம்பெரும்பூதங்கள் ஆகிய பதினாறும் அஹங்கார தத்துவத்தின் மாறுபாடுகளே. இவற்றின் அதிஷ்டான தேவதைகளின் எந்த சக்தியை உபாசனை செய்தாலும், எல்லா செல்வங்களும் கிடைக்கும். 

மூல தத்வமான ஆதிசக்தியுடன் கூடிய பரமேஸ்வரனையும், வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.

பகவான் ஸ்ரீ ஹரியோ, குணங்களற்ற நிர்குணர். ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவர். எல்லா உள்ளங்களிலும் சாட்சியாகவும், ஆன்மாவாகவும் உறைந்தபோதும், எதிலும் படாமல் பூரண ப்ரும்மமாகத் தனித்து நிற்பவர். அவரை வழிபடுபவனும் நிர்குணன் ஆகிறான். 

தன்னை வணங்கும் ஜீவனின் பிறவிச்சுழலை அறுக்க, ஆசைகளை நிறைவேற்றுவதுபோல் நிறைவேற்றி, பின்னர் ஆசைகளே எழாமல் செய்து விடுகிறார். அனைத்தையும் துறக்கும் முடிவில் ஜீவன் பரமஹம்ஸனாகிறான்.

இதே கேள்வியை முன்பு உன் தாத்தா தர்மபுத்திரர் அஸ்வமேத யாகம் முடிந்ததும் கண்ணனிடமே கேட்டார். அதற்கு கண்ணன் கூறிய பதில் யாதெனில்,

நான் யாருக்கு அருள்புரிய விரும்புகிறேனோ, அவன் அனைத்து செல்வங்களையும் இழந்து, உறவுகளையும் இழந்து, மீண்டும் செல்வம் சேர்க்கப் பலமுறை முயன்று தோற்றுப்போய், முடிவில் என் பக்தர்களின் சங்கத்தை அடைவான். அப்போது அவனுக்கு நான் அருள் புரிவேன். ஸாதுசங்கத்தை அடைந்ததும் அவனுக்கு எல்லா செல்வங்களும் சேர்ந்தபோதிலும் என் அருளால் அவற்றில் நாட்டமிராது. 

பரம்பொருள் எல்லாவற்றைக் காட்டிலும் நுட்பமானது. ஸத்தானது‌. முடிவற்றது. அதை வழிபடுவது எளிதல்ல. எனவே மக்கள் என்னை விட்டு, என் வேறு வடிவங்களாக விளங்கும் தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

அந்த தெய்வங்கள் எளிதில் வரம் தருவதால், திமிர் அடைந்து வரம் தந்த தெய்வத்தை மறந்து அவமதிக்கக்கூட துணிவார்கள்.

ப்ரும்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் மூவருமே வரமும், சாபமும் அளிக்க வல்லவர்கள்தாம். அவர்களுள் சிவனுக்கு ஆசுதோஷி என்று பெயர். மனமொப்பி வழிபடுபவனுக்கு மகிழ்ந்து உடனே வரமளித்துவிடுவார். அவருடைய இந்த எளிமையைப் பயன்படுத்திக்கொள்ளும் அசுரர் பலர்.

என்று சொல்லி தொடர்ந்து விருகாசுரனின் கதையைச் சொல்லத் துவங்கினார் ஸ்ரீ சுகர்.