கண்ணன் பலராமனுடன் சேர்ந்து அசுரர்களைக் கொன்று பூமியின் பாரத்தைக் குறைத்தான். மேலும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே யுத்தத்தை வரவழைத்து ஒரு பெரும் கூட்டத்தை ஒரே இடத்தில் கூட்டி அனைவரையும் அழித்தான் கண்ணன்.
பல்கிப்பெருகியிருந்த யாதவ வீரர்களின் கூட்டம் எவராலும் வெல்ல இயலாததாய் விளங்கியது. அவர்களையும் அழித்தாலொழிய பூமியின் சுமை குறையாது என்றெண்ணினான் கண்ணன்.
என்னைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவர்களது வீழ்ச்சி சாத்தியமில்லை. ஆனால் அளவற்ற வீரம், மற்றும் செல்வத்தால் கட்டுப்பாடின்றி நடக்கத் துவங்கிவிட்டார்கள்.
எவருக்கும் பணிவோ, அடக்கமோ இல்லை. எதிர்க்க ஆளில்லாததால் மதர்த்துப் போயிருந்தார்கள்.
இவர்களை என்ன செய்வது என்று யோசித்த கண்ணன் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசி காடே தீப்பிடிப்பது போல், இவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டால்தான் உண்டு என்றெண்ணினான்.
அந்தணர்களின் சாபத்தை ஒரு காரணமாக வைத்து தன் இனத்தையே மொத்தமாக அழித்தான்.
தன் எல்லையற்ற புகழைப் புவியில் பரவச் செய்தான். வருங்கால மக்கள் அதைக் கேட்டும் பாடியுமே கண்ணனின் திருப்பாதங்களை அடைந்துவிடமுடியும் என்பதால் தானும் பரமபதத்திற்கு எழுந்தருளினான்.
பரீக்ஷித் கேட்டான்.
முனிச்ரேஷ்டரே! யதுகுலத்தவர்கள் அந்தணர்களிடம் பெருமதிப்பு கொண்டவர்களாயிற்றே. அவர்களுக்கு எவ்வாறு அந்தண சாபம் ஏற்பட்டது?
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்தின் ஆர்வத்தை மெச்சிவிட்டுக் கூறத் துவங்கினார்.
கண்ணன் அழகனைத்திற்கும் கூடாரமாக விளங்குபவன். அவனுக்கென்று தனி விருப்பங்கள் ஏதுமில்லை. பூபாரத்தைக் குறைக்கும் பணியில் யாதவ வீரர்கள் கூட்டம் மட்டுமே எஞ்சியிருந்தது.
ஒருநாள் முனிவர்கள் அனைவரையும் பிண்டாரகம் என்னும் ப்ரபாஸத்தில் போய்த் தங்குமாறு செய்தி அனுப்பினான். கண்ணனின் வேண்டுகோளை ஏற்று விஸ்வாமித்திரர், அஸிதர், கண்வர், துர்வாஸர், பிருகு, ஆங்கீரஸ், கச்யபர், வாமதேவர், அத்ரி, வஸிஷ்டர், நாரதர் ஆகியோர் ப்ரபாஸம் சென்று அங்கே சில காலம் வசித்தனர்.
ஒருநாள் யதுகுலத்தின் விளையாட்டுப்பிள்ளைகள் சிலர் முனிவர்கள் இருக்கும் இடம் சென்றனர். அவர்களைப் பார்த்ததும் ஏதாவது விஷமம் செய்யலாம் என்று தோன்றியது.
அவர்களுள் ஜாம்பவதியின் மகனான சாம்பன் முருகனின் அம்சமாகப் பிறந்தவன். மிகவும் அழகாக இருப்பான். அவனுக்குப் பெண் வேடமிட்டு முனிவர்கள் எதிரே அழைத்துப் போனார்கள்.
ரிஷிகளை நமஸ்காரம் செய்து, முனிச்ரேஷ்டர்களே! இவள் கர்பம் தரித்திருக்கிறாள். தானே கேட்பதற்கு வெட்கப்படுகிறாள். இவளுக்கு ஆண் மகன் பிறப்பானா? பெண் மகவா? தங்கள் தவ வலிமையால் கண்டு சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.
வேண்டுமென்றே விஷமம் செய்ய வந்த இளைஞர்களைக் கண்டு முனிவர்களுக்கு கோபம் வந்தது.
முட்டாள்களே! இந்தப் பெண்ணால் உங்கள் குலம் அழியப்போகிறது. இவள் வயிற்றில் ஒரு உலக்கைதான் பிறக்கும் என்றனர் முனிவர்கள்.
விளையாட்டிற்காகக் கூட ஸாதுக்களிடம் அபசாரப் படலாகாது. அவர்களது கோபம் குலநாசம் செய்யும் என்பதற்கான சான்று இது.