மனைவியின் அடுத்த பேறுகாலம் வந்ததும், அந்தணர் அர்ஜுனனுக்குத் தகவல் தெரிவித்தார். 

அர்ஜுனன் ஸ்நானம் செய்து, தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு பரமேஸ்வரனை தியானம் செய்து, தெய்வீக அஸ்திரங்களை வணங்கி, காண்டீபத்தைக் கையிலேந்திக் கிளம்பினான்.

பிள்ளைப்பேறு நடக்கும் இடத்தைச் சுற்றிலும் மேலும் கீழுமாக தன் பாணங்களால் ஒரு கூடு அமைத்தான்.

அந்தணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. சற்று நேரம் அழுகைச் சத்தம் கேட்டது. பின்னர் கண்களுக்குப் புலப்படாமல் வானில் சென்று மறைந்துவிட்டது.

அதைக் கண்ட அந்தணர் கோவென்று கதறத் துவங்கினார். இந்தப் பேடியான அர்ஜுனனைப் போய் நம்பினேனே. நான் ஒரு முட்டாள். ப்ரத்யும்னன், அநிருத்தன் பலராமன், கண்ணன் ஆகியோராலேயே இயலாத காரியம் வேறெவரால் ஆகும்?

இந்த முட்டாள் அர்ஜுனன், தெய்வம் கொண்டுபோன பொருளை மீட்கத் துணிவானோ. தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அறிவிலி. என்று கத்தினார்.

அவர் கத்திக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனன் தன் யோகசக்தியால் யமனின் நகரமான ஸம்யமனீ நகரத்திற்குச் சென்றான்.

அங்கே யமனிடம் விசாரித்தபோது, அவர் குழந்தையைத் தான் எடுத்துவரவில்லை என்று கூறினார்.

பின்னர் அர்ஜுனன் இந்திரன், அக்னி, ஸோமன், வாயு, வருணன், ஆகியோரின் நகரங்களுக்கும் தேவலோகம் முழுவதிலும் குழந்தையைத் தேடினான்.

எங்குமே குழந்தையைக் கண்டானில்லை.

மிகவும் சோர்வுற்று துவாரகை திரும்பிய அர்ஜுனன், தன் வாக்கைக் காப்பாற்றத் துணிந்தான்.

தீ வளர்த்து அதில் பாய ஆயத்தமானான்