வேதங்கள் பகவானின் ஸ்வரூபத்தை எவ்வாறு துதி செய்து வர்ணிக்கின்றன என்று பார்த்தோம்.
அதைக் கேட்ட அனைத்து ரிஷிகளும் ஸனந்தனரைப் பாராட்டினர்.
நாரதரிடம் நர நாராயண ரிஷி,
ஸனகாதி முனிவர்கள் படைப்பின் துவக்கத்தில் தோன்றியவர்கள். வான் வழிச் செல்பவர்கள். வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதங்கள் அனைத்தையும் பிழிந்து ஸாரமாக இந்த ச்ருதி கீதையை அருளியுள்ளனர்.
தாங்களும் ப்ரும்மாவின் மானஸ புத்திரராயிற்றே. ப்ரும்மத்தை அறிந்தவர்தானே. இந்த ப்ரும்மவித்தையை எப்போதும் சிந்தித்துக்கொண்டு உலகைச் சுற்றி வாருங்கள். என்றார்.
நாரதர் நைஷ்டிக ப்ரும்மச்சாரியாவார். ஆனந்த வடிவினர்.
மிகவும் விநயத்துடன் பதிலிறுத்தார்.
பகவானே! தாங்களே கண்ணனாக அவதாரம் செய்திருக்கிறீர்கள். தங்களுடைய புகழ் மிகவும் நன்மையைத் தரக்கூடியது. ஜீவன்களுக்கு அருள் புரிவதற்காக பல்வேறு அவதாரங்களும் லீலைகளும் செய்கிறீர்கள்.
என்று சொல்லி நர நாராயண ரிஷியையும், அவரது சிஷ்யர்களையும் வணங்கினார். பின்னர் என் தந்தையான வியாஸரின் ஆசிரமத்திற்கு வந்தார்.
வியாஸருக்கு நர நாராயணரின் திருமுகமாகக் கேட்ட அனைத்தையும் விளக்கினார்.
ஸ்ரீ சுகாசார்யார் தொடர்ந்தார்.
பரீக்ஷித்! குணங்களற்ற ப்ரும்மம் வாக்கிற்கு எட்டாதது. அதை எப்படி வேதங்களால் வர்ணிக்க இயலும் என்று நீ கேட்டாயல்லவா. அதற்கான விடைதான் ச்ருதி கீதை. என் தந்தை எனக்கு எப்படி உபதேசம் செய்தாரோ அதை அப்படியே உனக்கு உபதேசம் செய்தேன்.
முக்தியடைய எளிய வழி இறைவனை எப்போதும் சிந்திப்பதே. பயத்தைக் களையும் ஸ்ரீஹரியையே எப்போதும் வழிபடவேண்டும். அதுவே சிறந்த வழி. என்றார்.
அடுத்ததாக மிகவும் நுணுக்கமான கேள்வியைக் கேட்டான் பரீக்ஷித்.
மஹரிஷி! சிவபெருமான் உலகப் பொருள்கள் அனைத்தையும் துறந்து மலைமேலும், மயானத்திலும் வசிப்பவர். ஆனால் அவரை வழிபடுபவர்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் விளங்குகிறார்கள். ஸாக்ஷாத் திருமகளின் கணவரான ஹரியை வழிபடுபவர்கள் செல்வத்தையும் போதத்தையும் வெறுத்து பரமஹம்ஸர்களாகிறார்கள்.
இது எவ்வாறு? எனக்கு விளங்கவில்லையே. தியாகராஜாவாக விளங்குபவரை வழிபட்டால் செல்வமும், செல்வத்தின் அதிபதியை வணங்கினால் தியாகமும் வருமா?
இந்தக் கேள்வியைக் கேட்டதும் சுகப்ரும்மம் மிகவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிக்கொண்டு சிரித்தது.