வேதங்கள் கூறுகின்றன.
பகவானே! ஜீவன்கள் அனைத்தும் தங்களிடமிருந்தே தோன்றுகின்றன. ப்ரக்ருதியும் புருஷனும் பிறப்பற்றவர்கள். ஜீவன்கள் தங்களது அம்சமே. தாங்கள் வினைக்காட்பட்டு பிறப்பதில்லை என்றால் ஜீவன்கள் எப்படி பிறக்கும்?
உண்மையில் நீர்க்குமிழி என்ற ஒன்று இல்லை. அது நீரில் காற்று ஊடுருவதால் ஏற்படுகிறது. அதுபோல ப்ரக்ருதியில் புருஷனை ஏற்றிக் கற்பனை செய்வதால் பற்பல குணங்களும், பெயர்களும் கொண்ட ஜீவன்கள் தெரிகின்றன. நதியாக இருக்கும்வரை பெயர் உண்டு. கடலில் கலந்தபின் ஏது பெயர்?
பற்பல பூக்களின் மகரந்தங்கள் சேர்ந்து தேனாகின்றது. அதுபோல் பற்பல ஜீவன்கள் தங்களிடம் லயமாகின்றன. ஜீவன்களின் வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துபவர் தாங்களே.
நதிகள் கடலில் சங்கமித்தபின்பு தனித்த அடையாளத்தைத் துறப்பதுபோல, ஸாதுக்கள் தங்களுடன் கலந்து, அவர்களது நாம ரூபங்களை இழக்கிறார்கள்.
மாயையின் மயக்கத்தை எண்ணி பயந்து தங்களிடம் சரணடைகின்றனர். தங்களது புருவ நெறிப்பிற்கேற்பவே காலச் சக்கரம் சுழல்கிறது.
அனைவரையும் பயமுறுத்துகிறது. தங்களைச் சரணடைந்தவர்க்கோ பிறவிச் சுழலின் பயம் இல்லை.
எவ்வளவோ யோகிகள் தங்களது சுயமுயற்சியாலும் ப்ராணாயாமத்தாலும் பொறிகளைக் கட்டுகின்றனர். ஆனால், சரியான பாதையைக் காட்டும் குருவின் திருவடி பற்றாததால் சுலபத்தில் அவர்களது மனம் கட்டவிழ்ந்து புலன்களைக் கலக்கி சாதனைகளின் பயனை வீணடித்துவிடுகிறது.
படகோட்டி இல்லாத படகைப் போன்றது அவர்களது நிலை.
மனக் குதிரையை அடக்க நல்ல குதிரைப்பாகன் தேவை. முக்தி வேண்டுமெனில் நல்ல குருநாதரைச் சரணடையவேண்டும்.
குருவன்றி கதி வேறில்லை. குருவல்லால் முக்தியும் இல்லை.
உயர்ந்த ஆனந்த வடிவினரான குருநாதரை வணங்கி அவரது திருவடிகளில் பற்றுகொள்ளும் ஜீவன், சாதனைகளால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு ஆட்படாமல் துன்பங்களைக் கடக்கும். முக்தியடையும்.
தங்களையே சேவிப்பவனுக்கு எல்லா விதமான ஆனந்தமாகவும் தாங்களே விளங்குகிறீர்கள். அவனுக்கு மனைவி, மக்கள், உற்றார், உறவினர், செல்வம் ஆகியவற்றால் யாது பயன்?
செருக்குகளை உதறி, உலகைத் தூய்மையாக்கும் ஸாதுக்களே கங்கையைக் காட்டிலும் உயர்ந்த தீர்த்தங்களாவர். அவர்களது இதயத்தில் தாங்கள் குடியிருப்பதால், அவர்களது திருவடி தீர்த்தம் அனைத்து பாவங்களையும் அழிக்கிறது.
எனினும் அவர்கள் பல புண்ய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். அதன் காரணம் யாதெனில், பல காலமாக அத்தீர்த்தங்களில் நீராடும் மக்களின் பாவங்கள் அவற்றில் ஸாதுக்கள் நீராடுவதால் விலகுகின்றன. தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் புனிதப்படுத்தவே ஸாதுக்கள் யாத்திரை செல்கின்றனர். அவர்கள் தீர்த்த யாத்திரை என்னும் சாக்கில் போகுமிடத்திலெல்லாம் தங்களது புகழையும் லீலைகளையும் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் களித்திருக்கிறார்கள்.