ச்ருதி கீதை
வேதங்கள் கூறுகின்றன.
ஒருவன் பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தாலும், மலையிலிருந்து உருண்டு விழுந்தாலும், தீர்த்தயாத்திரைகள் ஆயிரம் செய்தாலும், வேதங்களைக் கசடறப் பயின்றாலும், இன்னும் எவ்வளவு கடினமான சாதனைகளைச் செய்தாலும், ஹ்ருதயத்தில் பக்தி இல்லையென்றால் தங்களைக் காண இயலாது.
பகவானே! தாங்கள் மனம், புத்தி, பொறிகள், கரணங்கள், செயல் ஆகிய அனைத்திலிருந்தும் தனித்து விளங்குகிறீர். ஆனால் அனைத்தின் சக்தியும் ஒருங்கே கொண்டிருக்கிறீர்.
பேரறிவே உருவானவர். பிறரின் துணையின்றித் தானே ஒளிர்பவர். பிறரையும் ஒளிரச் செய்பவர். தாங்கள் லீலைகள் செய்ய பிறரின் உதவி தேவையில்லை.
சிற்றரசர்கள் மக்களிடமிருந்து அவர்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்று பேரரசனுக்குக் கப்பம் செலுத்துவர். அதுபோல, இந்திரன் முதலான தேவர்கள் வேள்விகள் மூலம் பெறும் அவியுணவைத் தங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். பின்னர் அவற்றை தங்களின் ப்ரசாதங்களாக இந்திரியங்களின் தேவதைகளாக இருந்துகொண்டு நுகர்கிறார்கள்.
தங்களிடம் உள்ள பயத்தால் கடைமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றுகிறார்கள்.
தாங்கள் லீலை செய்ய எண்ணும்போது மாயையானது தங்களின் கடைக்கண் நோக்கிற்கேற்ப அசையும் அசையாப் பொருள்களைப் படைத்து விடுகிறது. அப்போது முன்வினைப் பயன் கொண்ட அத்துனை ஜீவன்களும் அவரவர் வினைக்கேற்ப மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, தேவராகவோ, பித்ரு கணங்களாகவோ, மற்றும் யக்ஷ கின்னர கந்தர்வராகவோ பிறப்பெப்பெடுக்கின்றன.
தாங்களோ ஆகாயம் போல் எல்லா இடத்திலும் வேறுபாடின்றிப் பரவியிருக்கிறீர். வேண்டுதல் வேண்டாமை இலாத தங்களைச் சொல்லோ மனமோ எட்டமுடிவதில்லை. காரண காரிய உருவான இவ்வுலகின் தொடர்பற்றுத் தனித்திருப்பதால் சூன்யம் போல் தோற்றமளிக்கிறீர். ஆனல் தாங்களே உண்மைப் பொருளான பூரணராவீர்.
ஜீவன்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்து அவற்றைக் கட்டுப்படுத்துகிறீர்கள்.
தங்கள் திருமேனி விவரத்தை முழுதும் அறிந்தவர் இல்லை. அவ்வாறு அறிந்தேன் என்று கூறுபவர் உண்மையில் அறியாதவரே.
அறிவுக்கெட்டாத தாங்களை அறிவுக்கெட்டும் பொருள்களைக் கொண்டு நிர்ணயம் செய்ய இயலாது. ஒவ்வொரு கொள்கையும் (மதம்) ஒன்றுக்கொன்று முரணானவை. தாங்களோ மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள். ச்ருதிகளாகிய எங்கள் கொள்கைப்படி, பரமேஸ்வரனான தங்களின் திருவடி பற்றுவதே முக்திக்கான வழி.