கண்ணன் தர்மத்திற்கு விரோதமாக நடந்த அரசர்களைத் தானேயும், சிலரை அர்ஜுனனைக் கொண்டும் அழித்தான்.
துவாரகையில் மேலும் சில ஆண்டுகள் மனைவிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வசித்தான். அவனது மனைவிகள் அனைவரும் கண்ணன் மேல் பித்துப் பிடித்தவர்களாக, மிகவும் ஒற்றுமையுடன் எப்போதும் கண்ணனின் புகழைப் பாடிய வண்ணமே இருந்தனர்.
ஒவ்வொரு மனைவிக்கும் பத்து புதல்வர்கள் பிறந்ததை முன்பே பார்த்தோம். அவர்களுள் 18 பேர் மாபெரும் வீரர்கள்.
அவர்களது பெயர்களாவன,
ப்ரத்யும்னன், அநிருத்தன், தீப்திமான், பானு, சாம்பன், மது, ப்ருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஹு, ச்ருததேவன், ஸுநந்தனன், சித்ரபாஹு, விரூபன்(வரூதன்), கவி, ந்யக்ரோதன் ஆகியவை.
இவர்களுள் ருக்மிணியின் ப்ரத்யும்னன் தந்தையைபோலவே எல்லா குணங்களும் பொருந்தியவனாக இருந்தான். ருக்மியின் மகள் அவனது மனைவியானாள். அவர்களது மகன் அநிருத்தன் மாபெரும் பலசாலியாக விளங்கினான்.
அவன் ருக்மியின் மகன் வயிற்றுப் பேத்தியை மணந்தான். அவனது மகன் வஜ்ரன். அந்தணர்களின் சாபத்தால் உலக்கையைக் காரணமாகக் கொண்டு அழிந்த யாதவர்களுள் இவன் ஒருவனே மிஞ்சினான்.
வஜ்ரனின் மகன் ப்ரதிபாஹு. அவனது புதல்வன் ஸுபாஹு. ஸுபாஹுவின் மகன் சாந்தஸேனன். அவனது புதல்வன் சதஸேனன்.
இந்த வம்சத்தில் வந்த அனைவருமே பெரும்செல்வம் நிரம்பியவர்களாகவும், நிறைய கல்வியறிவு படைத்தவர்களாகவும், பேராற்றலுடையவர்களாகவும், நீண்ட ஆயுள் கொண்டவர்களாகவும், அந்தணர்களிடம் மிகுந்த அன்புடையவர்களாகவும் இருந்தனர்.
யது குலத்தில் எண்ண இயலாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான இணையற்ற வீரர்கள் இருந்தனர். அவர்களுள் ஆயிரம் பேருக்கு ஒரு ஆசார்யர் வீதம் மூன்று கோடியே எண்ணாயிரத்து ஐநூறு ஆசார்யர்கள் இருந்தனர்.
உக்ரசேனரின் வம்சாவளியே பத்து லட்சம் கோடி. தேவாசுர யுத்தத்தில் இறந்துபட்ட பல கொடிய அசுரர்கள் மீண்டும் பூமியில் பிறந்து மக்களைத் துன்புறுத்தலாயினர். அவர்களை அழிப்பதற்காக பகவானின் கட்டளையை ஏற்ற தேவர்கள் யது வம்சத்தின் நூற்றியோரு பிரிவுகளில் பிறந்தனர். அனைவர்க்கும் கண்ணன் ஒருவனே தெய்வமாக விளங்கினான். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையிலும் முன்னேறியவர்களாக இருந்தனர்.
மனம், வாக்கு, செயல் அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்து அசனது ஏவல் ஒன்றையே ஏற்று, அவன் புகழைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தம்மை மறந்து ஆனந்த வாழ்வில் லயித்திருந்தனர்.