பரமேஸ்வரன் கருணை மிகுதியால் நெகிழ்ந்துபோய் பேசினார்.
அன்பனே! போதும் உன்னை வருத்திக்கொண்டது. என்னை முழுமனதாகப் பூஜிப்பவர்கள் நீரை மட்டும் அளித்தாலும் த்ருப்தியுடன் ஏற்பேன். வீணாக உன் உடலைச் சேதப்படுத்திக்கொள்ளாதே. என்ன விரும்புகிறாயோ கேள் என்றார்.
வ்ருகாசுரன் அவரது கருணையைப் புரிந்துகொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லிக்கொண்டு தெய்வம் வந்து எதிரில் நிற்கும்போது அதைவிடப் பெரும்பேறு என்ன இருக்கமுடியும்.
என்னுடனேயே இரு என்று கேட்கத் தெரியாமல், பாணாசுரன் என் நகரத்திற்குக் காவலாய் இரு என்று கங்கையைச் சிரசில் கொண்டவர்க்குக் காவல்காரவேலை கொடுத்தான்.
இந்த வ்ருகனோ, மிகவும் பைத்தியக்காரத்தனமாக நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவன் சாம்பலாகவேண்டும் என்று கேட்டான்.
பரமேஸ்வரன் அதிர்ந்தார். அவனது கீழான எண்ணத்தைக் கண்டு நொந்துபோய்த் தலையில் அடித்துக் கொண்டார்.
வளமான வாழ்வைக் கேட்காமல் பிறரின் அழிவைக் கேட்கிறானே. வாக்கைக் கொடுத்தாயிற்று. தீய எண்ணம் கொண்டவன் அதனாலேயே அழிவான் என்பது விதி என்பதால் அப்படியே ஆகட்டும் என்று அங்கீகரித்துவிட்டார்.
உடனே வ்ருகன், முதலில் உங்களது சக்தியான கௌரியை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறிக்கொண்டு பரமேஸ்வரன் தலையிலேயே கையை வைக்க ஓடிவந்தான்.
ஸத்ய ஸ்வரூபனான அவரது வாக்கு பொய்க்காது. ஆதலால் அவர் உடனே அங்கிருந்து கிளம்பினார்.
அவர் எங்கு சென்றாலும் துரத்திக்கொண்டு வந்தான் வ்ருகாசுரன்.
பரமேஸ்வரன் வைகுண்டத்தினுள் சென்றார். உள்ளே சென்ற எவரும் திரும்ப இயலாத இடம் அது.
தனக்குத் தீங்கு செய்பவரையும் பொறுத்தருளும் ஸ்ரீஹரி பரமேஸ்வரன் வருவதையும், பின்னால் வ்ருகன் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்து அனைத்தையும் உணர்ந்துகொண்டார்.
சட்டென்று யோகசக்தியால் ஒரு இளவயது ப்ரும்மச்சாரியாக வ்ருகனின் முன் தோன்றினார்.