ச்ருதி கீதை
யோகநித்ரையில் இருக்கும் பகவானைப் பார்த்து வேதங்கள் கூறுகின்றன
சில மனிதர்கள், ரிஷிகளால் வகுக்கப்பட்ட ஸம்ப்ரதாய வழிகளைப் பின்பற்றித் தங்களை உபாசிக்கிறார்கள்.
யோகிகள் வயிற்றிலுள்ள மணிபூரக சக்ரத்தில், அக்னி மண்டலத்தின் நடுவிலிருக்கும் உம்மை பூஜிக்கின்றனர்.
சூரிய மண்டல உபாசகர்கள் அனைத்து ரத்த நாளங்களுக்கும் ஆதாரமான ஹ்ருதய கமலத்தில் தங்களை பூஜிக்கிறார்கள்.
இன்னும் சில யோகிகள் தலை உச்சியில் ப்ரும்மரந்திரத்தின் வெளிவரை செல்லும் சுழுமுனையை எழுப்பி ஒளிமயமான வழியில் மேல்நோக்கிச் சென்று தங்களை அடைகின்றனர்.
தாங்களை எப்படிப் பூஜித்தாலும் தாங்கள் அவர்களது மரண பயத்தைப் போக்குகிறீர்கள்.
வயிறு, இதயம், தலை என்று கூறுங்கால் ப்ரும்மத்திற்கும் இவ்வுறுப்புகள் உள்ளனவா என்று பரீக்ஷித் ஐயம் கொள்ள வாய்ப்பிருந்ததால் தொடர்ந்து அதை விளக்குகிறார் ஸ்ரீ சுகர்.
வேதங்கள் கூறுகின்றன.
பகவானே! உயர்ந்தது, தாழ்ந்தது, நடுநின்றது என அனைத்து இடங்களிலும் அனைத்துப் பிறவிகளாகவும் தோன்றி பரவியிருக்கிறீர்கள்.
நீங்கள் ஒரே மாதிரி பரவிருந்தாலும் பொருள்களின் உயரம், தடிமன், தன்மை ஆகியவற்றிற்கேற்ப மாறுபாடுகள் தோன்றுகின்றன. அது தங்களின் தோற்றம்போல் இருந்தாலும் உண்மையில் இல்லை. தாங்கள் ஆனந்த மயமானவர், மாறுபாடற்றவர். சான்றோர்கள் உடலை வெறுத்து உள்ளிருக்கும் ஆத்ம ஜ்யோதியான தங்களையே எங்கும் எப்போதும் காண்கிறார்கள்.
ஜீவனுக்கு அவனது நல்வினை தீவினைக்கேற்ப உடலைத் தருவது தாங்களே. ஜீவன் தங்களது அம்சமேயாகும். சைதன்ய ரூபமான தங்களை எப்படி ஜடம் என்ற தத்துவத்தில் பொருத்த இயலாதோ, அதேபோல் ஜீவனையும் ஜடம் என்று தள்ள இயலாது. ஆத்மாவை புத்ர நாமாஸி, அதாவது தந்தைதான் தனயன் என்ற பெயரில் விளங்குகிறான் என்பதற்கேற்ப தந்தையான தங்களுக்கும் தங்களிடமிருந்து தோன்றிய ஜீவனுக்கும் தொடர்பு உள்ளது.
மாயையினால் மயங்கும் ஜீவன் காரியங்களைத் தான் செய்வதாக எண்ணுகிறது. காரியங்கள் அற்றுப்போன நிலையில் ஜீவன் தங்களுடன் ஒன்றிவிடுகிறது. தங்கள் திருவடிகளில் பக்தி செலுத்துவதன் மூலம் ஜீவன்களின் உலகியல் தளைகள் நீங்குகின்றன.