ஸ்ரீமத் பாகவதம் - 322

ஸ்ரீமத் பாகவதம் - 322
பரீக்ஷித்! சிசுபாலனைப் பற்றி முன்பே பார்த்தோம். வஸுதேவரின் தம்பிகளில் ஒருவன் தேவபாகன். அவனது மனைவி கம்ஸை. அவர்களது மகன்கள் சித்ரகேது, ப்ருஹத்பலன்.

தேவசிரவஸின் மனைவி கம்ஸவதி. இவர்களது மகன்கள் ஸுவீரன்,இக்ஷுமான். ஆனகனின் மனைவி கங்கை. இவர்களுக்கு ஸத்யஜித், புருஜித் ஆகிய மகன்கள்.

ஸ்ருஞ்ஜயன், மனைவி ராஷ்ட்ரபாலிகா. அவர்களது மகன்கள் விருஷன், துர்மர்ஷணன் ஆகிய பல மகன்கள். இதேபோல் சியாமகனின் மனைவி சுரபூ. அவர்களது மகன்கள் ஹரிகேசன், இரண்யாக்ஷன்.

வத்ஸகனின் மனைவி மிச்ரகேசி. அவளொரு தேவமாது. அவளது மகன் விருகன். அவனது மனைவி துர்வாக்ஷி. அவர்களது மகன்கள் தக்ஷன், புஷ்கரன், ஸால்வன் ஆகியோர்.

சமீகனது மனைவி ஸுதாமினி. இவர்கள் ஸுமித்ரன், அர்ஜுனன், பாலன் ஆகியோர். கங்கனின் மனைவி கர்ணிகை. அவர்களது புதல்வர்கள் ருததாமன், ஜயன் ஆகியோர்.

வஸுதேவரின் மனைவிகள் பௌரவி, ரோஹிணி, பத்ரா, மதிரா, ரோசனை, இளை, தேவகி ஆகியோர். பௌரவியின் மகன்கள் பன்னிருவர். மதிராவின் மகன்கள் நந்தன், உபநந்தன், கிருதகன், சூரன் ஆகியோர்.

ரோஹிணியின் மகன்கள் பலராமன், கதன், ஸராணன், துர்மதன், விபுலன், துருவன், கிருதன் சூரன் ஆகியோர்.

ரோசனையின் மகன்கள் ஹஸ்தன், ஹேமாங்கதன் ஆகியோர். இளையின் புதல்வர்கள் உருவல்கன் முதலிய பலர்.

தேவகியின் புதல்வர்கள் கீர்த்திமான், ஸுஷேணன், பத்ரஸேனன், ருஜு, ஸம்மர்தனன், பத்ரன், பலராமன் ஆகியோர். எட்டாவது குழந்தையாக ஸ்ரீ மன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் செய்தார்.

உன் பாட்டியான சுபத்ராவும் வஸுதேவரின் பெண்ணாவாள். இவ்வுலகில் எப்போதெல்லாம் அறநெறி தாழ்ந்து மறநெறி வளர்கிறதோ, அப்போதெல்லாம் ஸர்வேஸ்வரனான பகவான் ஸ்ரீ ஹரி பூவுலகில் வந்து பிறக்கிறார்.

பகவான் ஒருவரே அனைத்திற்கும் சாட்சியாக இருந்து அனைத்தையும் கண்காணிப்பவர். எதிலும் ஒட்டாதவர். தனித்து நிற்பவர். நீக்கமற நிறைபவர். மாயையின் தலைவர். அவரது செய்கைகள் அனைத்தும் மாயையினால் அவர் செய்யும் லீலையே ஆகும்.

Close Menu