ஸ்ரீமத் பாகவதம் - 321

ஸ்ரீமத் பாகவதம் - 321
உக்ரஸேனனுக்கு கம்சன், ஸுநாமா, ந்யக்ரோதன், கங்கன், சங்கு, ஸுஹூ, ராஷ்டிரபாலன், ஸ்ருஷ்டி, துஷ்டிமான் ஆகிய ஒன்பது மகன்களும், கம்ஸா, கம்ஸவதி, கங்கா, சூரபூ, ராஷ்ட்ரபாலிகா என்று ஐந்து மகள்களும் இருந்தனர். இவ்வைந்து பெண்களையும் வஸுதேவரின் தம்பியான தேவபாகன் மணந்தான்.

சித்ரரதனின் மகனான விதூரதனின் வம்சம் முறையே சூரன், பஜமானன், சினி, ஸ்வயம்போஜன், ஹ்ருதீகன் ஆகியோர். ஹ்ருதீகனின் புதல்வர்கள் மூவர். அவர்கள் தேவபாகு, சததன்வா, க்ருதவர்மா. விதூரதன் தேவமீடன் என்றும் அறியப்படுகிறான். அவன் மகன் சூரனின் மனைவி மாரீஷா. அவர்களது புதல்வர்கள் வஸுதேவர், தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், ஸ்ருஞ்ஜயன், சியாமகன், கங்கன், சமீகன், வத்ஸகன், விருகன் ஆகிய பதின்மர். இவர்கள் அனைவரும் குற்றமொன்றில்லாத கோமான்கள். நற்றவத்தோர்.

வஸுதேவர் பிறந்தபோது தேவர்கள் துந்துபி, ஆனகம் முதலிய வாத்யங்களை இசைத்தனர். எனவே அவர் ஆனகதுந்துபி என்றும்‌அழைக்கப்பட்டார். இவருக்கு பிருதை எனப்படும் குந்தி, ச்ருததேவி, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவா, ராஜாதிதேவி ஆகியோர் தங்கைகள். வஸுதேவரின் தந்தையான சூரஸேனரின் உற்ற நண்பன் குந்திபோஜன். அவனுக்கு மகப்பேறில்லாததால் சூரஸேனர் தன் மகள் ப்ருதையை அவருக்கு ஸ்வீகாரம் (வளர்ப்பு மகள்) கொடுத்தார். எனவே அவள் குந்தி என்றழைக்கப்பட்டாள்.

ப்ருதை சாதுர்மாஸ்ய சங்கல்பத்திற்காக வந்திருந்த துர்வாச மஹரிஷியின் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்தாள். அவளது வருங்காலத்தை உணர்ந்த துர்வாசர், அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். அதைச் சொல்லி அழைத்ததும், அழைக்கப்பட்ட தேவன் நேரில் வந்து மகப்பேறு கொடுத்துவிடுவார்.

சிறுமியான குந்தி, தன் விளையாட்டு புத்தியாலும், ஆர்வத்தாலும் அந்த மந்திரத்தைச் சோதித்துப் பார்க்க எண்ணினாள். எந்த தேவனை அழைப்பது என்று யோசித்து, உச்சி வேளையில் வானில் பிரகாசித்த சூரியனை நினைத்து மந்திரம் சொன்னாள். உடனடியாக சூரியன் வந்து அவளெதிரில் நின்றார். பயந்துபோன குந்தி மன்னிப்பு வேண்டினாள்.

இறையே! மந்திரத்தைச் சோதிப்பதற்காக விளையாட்டாக அழைத்துவிட்டேன். இப்போது எனக்கு எதுவும் வேண்டாம். திரும்பிச் செல்லுங்கள். என்றாள்.

ஆனால், சூரியனோ, என் தரிசனம் வீணாகாது. சொன்ன மந்திரத்தின் பலனை வீணாக்க இயலாது. இப்போதே உன் வயிற்றில் ஒரு குழந்தை உண்டாகும். இதனால் உன் கற்பிற்குக் கேடு வராது என்று சொல்லி அருள் செய்துவிட்டு மறைந்துவிட்டார்.

அக்கணமே அவளது உதரத்திலிருந்து இன்னொரு சூரியனோ என்று ஐயப்படும்படியான தேஜஸுடன் ஒரு குழந்தை பிறந்தது. பத்தே வயது கூட நிரம்பாத குந்தி பயந்துபோனாள். என்ன செய்வதென்று அறியாமல், ஒருவர்க்கும் தெரிவிக்காமல், குழந்தையைக் கூடையில் வைத்து கங்கையில் விட்டுவிட்டாள்.‌ அந்தக் குழந்தைதான் கர்ணன். போர்வலி மிகுந்த உன் தந்தை குந்தியை மணந்தார்.

ப்ருதையின் தங்கையான ச்ருததேவியை கரூஷ தேச மன்னன் வ்ருத்தசர்மா என்பவன் திருமணம் செய்துகொண்டான். அவர்களது மகன் தந்தவக்த்ரன். இவன் ஸனகாதி முனிவர்களால் சபிக்கப்பட்ட பார்ஷதனான விஜயன் ஆவான்.

ஹிரண்யாக்ஷனாகப் பிறந்து வராக ஸ்வாமியால் கொல்லப்பட்டான். பின்னர் கும்பகர்ணனாகப் பிறந்து ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி யால் மடிந்தான். இப்போது மூன்றாவதாக தந்தவக்த்ரனாகப் பிறந்தான்.

கேகய மன்னனின் மனைவியானாள் ச்ருதகீர்த்தி. அவர்களுக்கு ஸந்தர்தனன் முதலிய ஐந்து மகன்கள் தோன்றினர்.

ராஜாதிதேவி ஜயஸேனனை மணந்தாள். அவர்கள்து விந்தன், அனுவிந்தன் என்று இரு மகன்கள். அவர்கள் அவந்தி தேசத்தைச் சேர்ந்தவர்கள்.

ச்ருதச்ரவாவை சேதி மன்னன் தமகோஷன் மணந்தான். அவனது மகன் சிசுபாலன்.

Close Menu