மாப்பிள்ளை கோபித்துக்கொண்டு காசியாத்திரை செல்வதாக நம்மில் பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். காசியாத்திரை எனும் சடங்கின் தாத்பர்யம் அதி அற்புதமானது. அக்காலத்தில் ஒரு ஆண்மகன் தனது குருகுலத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியில் வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். திருமணம் செய்து கொள்வதற்கும், பெண்ணின் தகப்பனாரிடம் பொற்காசுகளைத் தந்து பெண்ணை மணமுடிப்பதற்கும் அந்த ஆண்மகனுக்கு பணம் தேவை. 

அவனோ இப்பொழுதுதான் பள்ளிப்படிப்பினை முடித்துவிட்டு வந்திருக்கிறான். எனவே காசிக்குச் சென்று போஜராஜனிடம் தான் கற்ற வித்தையினைக் காண்பித்து பொன்னும், பொருளும் பெற்று வருவதற்காக காசிக்குச் செல்கிறான். அந்த நேரத்தில் பெண்ணின் தகப்பனார் அல்லது மைத்துனர் வழிமறித்து தங்களுக்கு பொன், பொருள் எதுவும் வேண்டாம் என்றும், தனது மகளை அல்லது சகோதரியை கன்னிகாதானம் செய்து தருவதாகவும் வாக்களித்து உபசாரங்கள் செய்து மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள். 

இதில் மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அக்காலத்தில் பள்ளிப்படிப்பினை முடித்த மாணவன் உயர்கல்வி கற்பதற்கு காசிமாநகரத்திற்குச் செல்வான். ஏனெனில் காசி நகரத்தில்தான் கற்றறிந்த பண்டிதர்கள் பலரும் வசித்து வந்தார்கள். அப்படி இந்த மாணவன் மேற்படிப்பிற்காக காசிக்குச் சென்றால் திரும்பி வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக காசிக்குச் செல்லவேண்டும் என்பதற்காகவும் இந்த காசியாத்திரை சம்பிரதாயமானது நிகழ்த்தப்படுகிறது. இதனை இடையில் தோன்றிய சம்பிரதாயம் என்று ஒதுக்க இயலாது. காசியாத்திரை சடங்கிற்கான ஆதாரம் ஸ்மிருதிகளில் காணப்படுகிறது