கண்ணன்

கண்ணன் தொடர்ந்தான்.

ஜீவனுக்குள் ஹிரண்யகர்பனாக இருக்கும் நான் ப்ராணனை ஆதாரமாகக் கொண்ட ஓங்கார வடிவில் இருக்கும் அநாஹத ஒலியாக வெளிப்படுகிறேன்‌.

சிலந்தி இதயத்திலிருந்து வாய் மூலமாக நூலைக் கொண்டுவந்து வலை பின்னுகிறது. பின்னர் உள்ளுக்குள்‌ இழுத்துக்கொள்கிறது.

அவ்வாறே ஸ்பர்சம், ஸ்வரம், ஊஷ்மம், அந்தஸ்தம் என்ற ஒலிகளாக தானே வெளிப்படுகிறது. அதிலிருந்து சந்தஸ் உண்டாகிறது. பின்னர் மொழி வடிவில் வளர்கிறது.

காயத்ரி, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி, அதிச்சந்தஸ், அத்யஷ்டி, அதிஜகதி, விராட் ஆகியவை சந்தஸ்களின் சில வகைகளாகும்.

கர்ம காண்டம்,‌ ஞான காண்டம், உபாசனா காண்டம், ஆகியவற்றில் கூறப்பட்டிருக்கும் விதிகள், விலக்குகள் ஆகியவற்றின் மறைபொருளை அறியத்தக்கவர் எவருமிலர்.

எல்லா வேதங்களும் என்னைத்தான் பேசுகின்றன. உபாசனா காண்டம் இந்திராதி தேவர் வடிவில் என்னைக் காட்டுகிறது.

ஞானகாண்டம் ப்ரும்மத்திலிருந்து ஆகாயம் தோன்றியது என்று துவங்கி, ப்ரபஞ்ச ச்ருஷ்டியை விளக்குகிறது. பின்னர் இவ்வுலகமும் பரமாத்மாவும் ஒன்றே என்று என்மேல் மற்ற பொருள்களை ஏற்றிக் கூறுகிறது‌. இவ்வுலகம் என் வடிவமே என்று நிரூபித்துவிடுகிறது‌.

என்மேல் கற்பிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் மாயை. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு என்னிடம் அமைதியைக் காட்டுகிறது.

உத்தவன் இடை மறித்தான்.
கண்ணா! தத்துவங்கள் எவ்வளவு?

இருபத்தெட்டு என்று கூறினீர்களே. இருபத்தாறு, இருபத்தைந்து, ஏழு, நான்கு, ஆறு, பதினாறு என்றெல்லாம் பல்வேறாகக் கூறுகிறார்களே.

எதற்காக முனிவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்?

கண்ணன் சிரித்தான்:
உத்தவா! வைதிக ப்ராம்மணர்கள் கூறுவதனைத்தும் சரிதான். ஏனென்றால் எல்லாத் தத்துவங்களும் ஒன்றுக்கொன்று உள்ளடங்கியவை. என் மாயையினால் அவர்களால் எவ்வளவு அறிய முடிந்ததோ அதைக் கூறுகிறார்கள்.

அதை வைத்து தாம் சொல்வதே சரி என்று வாதிடுகிறார்கள். என்னுடைய சக்தியே அனைவரிடமும்‌ பரிணமிக்கிறது. அவரவர் புத்திக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். என் மஹாமாயையே அனைத்திற்கும் காரணம்.