ஸ்ரீமத் பாகவதம் - 324

ஸ்ரீமத் பாகவதம் - 324
பத்தாவது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தத்திற்கு 'ஆச்ரயம்‌' என்று பெயர். அதாவது அனைவரும் அடைய வேண்டியது என்று பொருள்.


இந்த ஸ்கந்தம்‌ முழுவதும் கண்ணன் பிறந்தது முதல் திரும்பி வைகுண்டத்திற்கு எழுந்தருளும் வரை நடந்த சரித்ரம் அனைத்தும் மிக விரிவாக தொண்ணூறு அத்யாயங்களில் விவரிக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.


முதல் ஒன்பது ஸ்கந்தத்தில் ஸ்ரீ சுகர், மன்வந்தரக் கதைகள், ஸ்ருஷ்டி, பிரபஞ்ச வர்ணனை, பதினான்கு லோகங்களின் வர்ணனை, பகவானின் பல்வேறு அவதாரக் கதைகள், சூர்ய வம்ச வர்ணனை, சந்திர வர்ணனை ஆகியவற்றை மிக விரிவாகக் கூறினார்.

எங்கெல்லாம் சந்தர்ப்பம் அமைகிறதோ அங்கெல்லாம் பகவானின் பரதத்வ நிர்ணயத்தை நிறுவுகிறார்.


இந்த ஒன்பது ஸ்கந்தங்களை நாம் விரிவாகப் படித்தால் தான் பத்தாவது ஸ்கந்ததில் கூறப்படும் பகவானின் எளிமை நமக்குப் புரியவரும்.


ஈரேழு லோகங்களின் தலைவன், அத்தனை லோகபாலர்களையும் படைத்து அவர்களை ஸ்தானத்தில் நிறுத்தி நியாமகனாக (நிர்வாகி) இருந்து உலகைக் காப்பவன், இப்போது வெண்ணெய் திருடப்போகிறான், கோபியரிடம் மத்தால் அடி வாங்கப்போகிறான். இடைச் சிறுவர்களுடன் பச்சைக் குதிரை தாண்டி விளையாடப்போகிறான், யக்ஞ நாராயணனான பகவான்தான் இடைச்சிறுவர்கள் வாயிலிருந்து எடுத்து எச்சில் உணவை உண்டு எச்சில் நாராயணனாக விளங்கப்போகிறான்.

என்பதைப் புரிந்துகொண்டாலேயே பகவான் எவ்வளவு ஸௌலப்யமானவன் என்பதும், எளிமையானவன் என்பதும் விளங்கும்.


எனவே தான் நேராக கண்ணன் கதையைக் கூறாமல், இவ்வளவு சரித்ரங்களையும் விவரமாகக் கூறி, பகவான் யாரென்பதை பரீக்ஷித்தின் மனத்தில் நன்றாகப் பதிய வைக்கிறார் ஸ்ரீ சுகர்.


இப்போது ஒன்பதாவது ஸ்கந்தத்தின் முடிவில் அவசரம் அவசரமாக கண்ணனின் கதையைச் சில ஸ்லோகங்களில் கூறி முடித்துவிட்டு, கண்ணன் கதை முடிந்ததென்று கூறிவிட்டார் ஸ்ரீ சுகர்.

எப்படி இருக்கும் பரீக்ஷித்திற்கு?

Close Menu