சௌனகர் கேட்டார் அந்த நீசன் கலிபுருஷனோ? பசுவைக் காலால் உதைப்பவன் வேறு யாராய் இருக்கும்? மேலும் அவர் ஒன்று கேட்கிறார். இந்நிகழ்வு கண்ணனோடு தொடர்புடையதானால் விவரித்துக் கூறுங்கள். இல்லையெனில் வேண்டாம். பகவானைப் பற்றியோ, அவனது பகதர்களைப் பற்றியோ கூறாமல் வேறு விஷயங்களைச் சொல்வது வெட்டிப்பேச்சாகும். அதனால் யாது பயன்?

எவ்வளவு அருமையான கேள்வி.

மேலும் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் சொல்கிறார். வரும் யுகத்தில் மனிதர்கள் அல்ப ஆயுள் கொண்டவர்கள். காலத்தை வீணே கழித்து மரணமடைவார்கள். ஆனால் முக்திக்கும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் பொருட்டு இங்கு நைமிஷாரண்யத்தில் ஸத்ரவேள்வி நடக்கிறது. நேரில் வருகை தரும்படி யமதர்மராஜனை அழைத்து விட்டார்கள். அவரும் வந்துவிட்டார். உள்ளே வந்துவிட்டால் யாகம் முடியும்வரை அவர் திரும்பிப் போக இயலாது. அவரது வேலையும் நடக்காது. அதனால் அவர் இங்கிருக்கும் வரை ஒருவருக்கும் மரணம் என்பதே இல்லை. மனிதர்கள் அனைவருக்கும் இங்கு நீங்கள் சொல்லும் கதையும் முழுமையாகப் போய் சேரவேண்டும். எனவே, கலியுகத்திற்கேற்ற பகவத் கதைகளையே கூறுங்கள். என்றார்.

ஸாதுக்கள் நம் மீது காட்டும் கருணையையும், உதாரகுணத்தையும் சொல்ல வார்த்தைகள் சிறைப்படுகின்றன. ஸூதர் சொல்லலானார். பரீக்ஷித் திக்விஜயத்திற்குக் கிளம்பினான். செல்லுமிடம்தோறும், கண்ணனின் பெருமை, முன்னோரின் புகழ், அவன் காப்பாற்றப்பட்ட சரித்ரம், எல்லாவற்றையும் அவனுக்கு செவிகுளிரச் சொன்ன ஸாதுக்களுக்கு ஏராளமான வெகுமதிகளை வழங்கினான். கண்ணன் அவனது குடும்பத்தில் செய்த லீலைகளையும் உதவிகளையும் பூமண்டலம் முழுவதும் எங்கு சென்றாலும் யாராவது அவனுக்குச் சொன்னார்கள்.

அவற்றைக் கேட்டு கேட்டுக் கண்ணன் மீது அபாரிமிதமான பக்தியை வளர்த்துக்கொண்டான். சிலருக்கு தன் முன்னோர்கள் உதவி செய்திருந்தனர். சிலர் கண்ணனும் அர்ஜுனனும் இணைந்து தங்கள் தேசத்திற்கு வந்து செய்தவற்றை நினைவு கூர்ந்தனர். இப்படியாக அவன் பூலோத்தில் ஸஞ்சாரம் செய்கையில் ஒருநாள் ஒற்றைக்காலுடன் ஒரு எருது பசுவின் மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்ததைக் கண்டான். அவ்விரண்டும் அழுதுகொண்டிருந்தன. எருதின் ஒரே ஒரு காலையும் விகாரமான ஒருவன் கத்தியைக் கொண்டு வெட்டத் தயாராய் இருந்தான். மூவரையும் உற்றுப்பார்த்தான் பரீக்ஷித். முன்னோர்கள் காட்டிய நெறியில் தவறாது ஒழுகுவதால் பசுவும், காளையும் பேசியது அவனுக்குப் புரிந்தது. எருது சொன்னது, பூமிதேவியே, உன் பாரத்தைத் தீர்க்கவே கண்ணன் அவதாரம் செய்தார். அவரது லீலைகளை நினைத்தாலே முக்தி கிட்டுமே. விட்டுப் போய்விட்டார் என்று வருந்துகிறாயா? தேவர்களும் உன்னைப் பூஜிப்பார்களே. உன் சௌபாக்யம் உன்னை விட்டுப்போனதா? இளைத்திருக்கிறாயே..

பூமிதேவி சொன்னாள் தர்மதேவரே, தாங்கள் அறியாததா? பகவானின் கருணையால், தவம், ஒழுக்கம், தயை, ஸத்யம் என்ற நான்கு கால்களுடன் விளங்கினீர்கள். இப்போது சத்யம் என்ற ஒரு பாதம்தான் மீதமிருக்கிறது. எப்படியோ அதை வைத்துக்கொண்டு ஜீவிக்கிறீர். அதையும் கலிபுருஷன் ஊனமாக்கப் பார்க்கிறான். புருஷோத்தமனின் பாதம் என்மீது படும்போதெல்லாம் நான் புளகாங்கிதம் அடைந்தேனே. அவர் பிரிவை யார்தான் பொறுப்பார்?

ஸரஸ்வதி நதிக்கரையில் நடந்த இவ்வுரையாடலைக் கேட்டான் பரீக்ஷித். அம்மனிதனைப் பார்த்து நான் காத்து நிற்கும் இவ்வுலகில் பலமற்றவர்களைத் துன்புறுத்தும் நீ யார்? அரசன் போலிருந்தாலும், நீசனாய் இருக்கிறாய். கண்ணனு அர்ஜுனனும் சென்றபின் கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் கொடுமை செய்கிறாய்.. பூமிதேவியைப் பார்த்து சொன்னான். துன்பமடைந்தவர்களைக் காப்பதே அரசனின் முதல் கடைமை. எந்த ஆட்சியில் தீயோர்களைக் கண்டு பயம் கொள்கிறார்களோ அந்த அரசனது புகழ், ஆயுள், செல்வம், உயர்ந்த கதி எல்லாம் அழிகின்றன. உங்களைத் துன்புறுத்துபவன் யார்? தர்மதேவதை சொன்னது துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைச் சாஸ்திரம் பலவாறு கூறுகிறது. சிலர் விதி என்றும், சிலர் கர்மா என்றும், சிலர் இயற்கை சிலரோ தெய்வம்தான் என்றும் சொல்கிறார்கள். பரீக்ஷித், அதைக்கேட்டு, நீங்கள் பூமாதேவியா? இவரே தர்மதேவதையாய் இருக்கவேண்டும். இம்மனிதன் கலிபுருஷனோ? என்று வினவ, பூமிதேவி அமைதி காத்தாள். அதர்மத்தைச் செய்தவனுக்கு எந்த தண்டனை உண்டோ அதே நரகம் காட்டிக்கொடுப்பவனுக்கும் உண்டு என்று வாளாவிருக்கிறீர்களா? நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இவனை தண்டிக்கிறேன் என்று கூறி மிகுந்த கோபம் கொண்டு வாளை உருவி, அந்த மனிதனை வெட்டத் துணிந்தான். பயந்துபோன அம்மனிதனோ பரீக்ஷித்தின் காலைப் பிடித்துக்கொண்டு அபயம் அபயம் என்று அலறினான். அபயம் என்பவனைக் கொல்வது தகாதென்றெண்ணி, வாளை உறையில் போட்டான் பரீக்ஷித். சரி நான் உன்னைக் கொல்லவில்லை. அபயம் வேண்டுமெனில் என் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் நீ இருக்கலாகாது. உடனே வெளியேறு. கலி சொன்னான் சக்ரவர்த்தியே, இப்புவி முழுதிற்கும் நீங்களே அரசன். நான் எங்கு இருப்பதென்று நீங்களே கூறுங்கள். தங்கள் கட்டளைக்குக் கீழ்ப் படிகிறேன்.

சற்று யோசித்த பரீக்ஷித், சூதாட்டம்,மது, அறநெறியற்ற, கற்பில்லாத மகளிர், ப்ராணிவதம் ஆகிய நான்கும் இருக்கும் இடங்களில் நீ வசிக்கலாம். அரசே, எனக்கு இவை போதாது, இன்னும் சில இடங்கள் வேண்டும் சரி, தங்கமிருக்கும் இடத்தைக் கொள். என்றதால், பொய், மதம், பொருந்தாக் காமம், பகை ஆகிய இடங்களும் கலிக்குக் கொடுக்கப்பட்டன. மேற்சொன்ன இடங்களில் கலி வசிக்கலானான். மீண்டும் தயை, ஸத்யம், ஒழுக்கம், தவம் ஆகியவை செழித்தன.