தர்மபுத்ரர் பயங்கரமான துர்நிமித்தங்களைக் கண்டார். மரம் செடி கொடிகள் அந்தந்த பருவங்களின் பலனைத் தரவில்லை. மக்களிடையே துர்குணங்களும் சண்டை சச்சரவுகளும் மிகுந்தன. கலியுகத்தின் அறிகுறியாக மக்கள் போறாமை கொண்டு, சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இவற்றைக் கண்டு யுதிஷ்டிரர் மிகவும் கவலை கொண்டு பீமனிடம் சொன்னார். பீமா, நாரதர் சொன்ன காலம் வந்துவிட்டதோ என்றெண்ணுகிறேன். துவாரகைக்குச் சென்ற அர்ஜுனனை ஏழு மாதங்களாகியும் காணவில்லை. அங்கிருந்து செய்திகளும் இல்லை. எனக்கு ஏராளமான துர்நிமித்தங்கள் தென்படுகின்றன. இடது தோள், துடை, கண் இவை துடிக்கின்றன. பசுக்கள் இடமாகச் சுற்றுகின்றன. 

கழுதைகள் வலமாகச் சுற்றுகின்றன. புறாவைப் பார்த்தால் யமதூதனோ என்று தோன்றுகிறது. கோட்டானும், காக்கைகளும் விடாமல் அலறுகின்றன. நாய்கள் அரசனான என்னைப் பார்த்து தைரியமாய்க் குலைக்கின்றன. திக்குகள் தெளிவின்றி உள்ளன. பூமி ஆடுகிறது. புழுதிக் காற்று வீசுகிறது. சூரியன் ஒளியிழந்து காணப்படுகிறது. கிரகங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. நதிகளும் நீர்நிலைகளும் கலங்கியிருக்கின்றன. பூமாதேவிக்கு பகவானின் சரண சம்மந்தம் விடுபட்டு விட்டதா? கன்றுகள் பால் குடிப்பதில்லை. பசுக்களும் கறப்பதில்லை. தெய்வச்சிலைகள் அழுவதைப்போல் இருக்கின்றன. ஒருவர் மனத்திலும் மகிழ்ச்சி இல்லை. என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சபைக்குள் ஒருவர் நுழைந்தார். கண்கள் பஞ்சடைந்து, களையிழந்த முகத்துடன், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்தார். அர்ஜுனனைப்போல் ஜாடை இருந்தது. அடையாளம் தெரியவில்லை.  அருகில் வந்ததும் பார்த்தால், அர்ஜுனனேதான் அது. அதிர்ந்துபோனார்கள் அனைவரும். என்னாச்சு அர்ஜுனா?
ஓடி வந்து அவன் கரங்களைப் பற்றி முகத்தை நிமிர்த்தினான் பீமன்.

அவன் கண்களில் ஆறாகக் கண்ணீர். முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது.
விஜயா, தேர் எங்கே? படைகள் எங்கே? நடந்தா வருகிறாய்? கண்ணன் எப்படி இருக்கிறான்? துவாரகையில் எல்லோரும் நலமா? உன்னை யாராவது அவமதித்தார்களா? ஏதாவது ப்ரதிக்ஞை செய்துவிட்டு அதை மீறினாயா? பெரியோர்கள் பசியோடிருக்க நீ முதலில் சாப்பிட்டாயா? நல்ல பெண்டிரிடம் தவறாக நடந்தாயா? யாரிடமாவது தோற்றுவிட்டாயா? துவாரகையையும் கண்ணனையும் விட்டு வந்த பிரிவாற்றாமையா? வேறேதும் கெட்ட செய்தி இல்லையே? அடுக்கடுக்காய்க் கேள்விகள். தலையில் அடித்துக்கொண்டு ஓவென்று கதறி அழுதுகொண்டே தரையில் அமர்ந்தான் அர்ஜுனன்.

அழுதுகொண்டே நம் உறவினன் என்று நினைத்த அந்த பகவான் கண்ணன் நம்மை ஏமாற்றிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்பிவிட்டார். ஹா இவ்வளவு நாட்களாக என்னிடம் இருந்த வீரம், தைரியம், தேஜஸ் எல்லாம் அவர் என்னருகில் இருந்தவரை இருந்தது. அவரோடு எல்லாம் போய்விட்டது. கண்ணனாலேயே நான் தேவலோகம் வரை சென்று வந்தேன். இந்திரனை வென்று காண்டவ வனத்தை அக்னிக்குத் தந்தேன்.

உயர்ந்த இந்திரப்ரஸ்தம் நமக்குக் கிடைத்தது. எல்லா அரசர்களும் கப்பம் செலுத்தினார்கள். பீமன் அண்ணா ஜராசந்தனைக் கொன்றதும் கண்ணனால்தான். யுத்தத்தின்போது நம்முடனேயே இருந்தானே. குதிரைகளையெல்லாம் குளிப்பாட்டினான். வனவாசத்தின் போதும், அக்ஞாத வாசத்தின்போதும் எவ்வளவு இடர்கள். அத்தனைக்கும் துணை நின்றானே. யுத்தம் முடியும்வரை பகவானான அவன் தேர்த்தட்டிலேயே உறங்கினான். இவ்வளவுநாள் வில்லுக்கொரு விஜயன் என்று நான் பெயர் வாங்கியதெல்லாம் கண்ணன் என்னருகில் இருந்ததால்தானே.. வஞ்சித்துவிட்டானே.. ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிச் சொல்லி பகவான் காத்ததைச் சொல்லி அழுதான் அர்ஜுனன். கண்ணன் கிளம்பியதும் வரும் வழியில் சாதாரணமான தீயோர் படையால் தோற்கடிக்கப் பட்டேன். அதே தேர், அதே காண்டீபம், அதே குதிரைகள், சண்டையிட்டதும் அதே அர்ஜுனனான நானேதான். ஆனால், கண்ணன் இல்லையென்றதும் என் பராக்ரமம் அழிந்துவிட்டதே. துவாரகையில் அனைவரும் அந்தணர் சாபத்தால் அறிவிழந்து, கள்ளைக் குடித்து, மனம் தடுமாறி, கோரைப்புற்களால் அடித்துக்கொண்டு இறந்தனர். நாலைந்துபேர்தான் எஞ்சியிருக்கின்றனர். பலமற்றவர்களை  பலம் பொருந்தியவர்கள் வெல்வார்கள். பலமுள்ளவர்களோ தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள்.

நம்மைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் பூமியின் பாரத்தை பகவான் குறைத்தார். பகவானின் குலமான இடையர் குலத்தை எவரால் அழிக்க முடியும்? அதனால், அவர்களுக்குள்ளேயே சண்டையிடச் செய்து அழித்துவிட்டார். கண்ணன், என்னை, அர்ஜுனா, பார்த்தா, நண்பா, விஜயா என்றெல்லாம் ஆசை ஆசையாய்க் கூப்பிடுவானே. அவன் குரல் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறதே என்று பலவாறு புலம்பி அழுதான். இவ்விஷயங்களை மைத்ரேயர் ஏற்கனவே விதுரரிடம் சொல்லியிருந்தார். எனினும் விதுரர் துக்ககரமான இச்செய்தியைச் சொல்ல தைரியமற்றுப்போய் சொல்லாமல் விட்டு விட்டார். நாரதரும் ஒரு சூசனை செய்துவிட்டுப் போனார். அனைவரும் சொல்லொணாத துயரில் மூழ்கினர். எவ்வளவு பேசினாலும், விதுரர் உற்சாகமிழந்து காணப்பட்டதையும், பின்னர் த்ருதராஷ்ட்ரனும், காந்தாரியும் கிளம்பியதையும், நாரதர் சொன்னதையும் தொடர்பு படுத்திப் பார்த்தார் தர்மபுத்ரர்.