விஷ்ணுராதனுக்கு புண்ணியாக வசனமும், ஜாதகர்மாவும் தௌம்யர் போன்ற மஹரிஷிகளைக் கொண்டு செய்விக்கப் பட்டது.
தர்மபுத்ரர் ஏராளமான தானங்களைச் செய்தார். அப்போது அவரை வாழ்த்திய அந்தணர்கள், விஷ்ணுராதன், ஸார்வபௌமனாகவும், மிகுந்த புகழுடையவனாகவும், மஹா பாகவதனாகவும் விளங்குவான்.
இக்ஷ்வாகு போல் மக்களைக் காப்பவன்.
ராமனைப்போல் மக்களிடத்தில் பிரியமுள்ளவன். சிபியைப்போல் கொடையாளி, பரதனைப்போல் தன்னைச் சேர்ந்தவர்களுடைய புகழை அதிகரிக்கச்செய்வான்.
கார்த்தவீர்யன், அர்ஜுனன் இவர்களைப்போல் சிறந்த வில்லாளி,
அக்னிபோல் நெருங்க முடியாதவன்.
சிம்மம்போல் பராக்ரமம் உள்ளவன்,
பொறுமையுடையவன். ப்ரும்மாவைப் போல் பாரபட்சமில்லாதவன். சிவனைப்போல் அனுக்ரஹம் செய்பவன்.மஹா விஷ்ணுவைப் போல் அனைவர்க்கும் ஆச்ரயமாய் விளங்குவான். ஸாக்ஷாத் க்ருஷ்ணனைப்போல் அனைத்து நற்குணங்களும் கொண்டவன். ரந்திதேவன்போல் உதாரகுணமுள்ளவன்.
தைரியத்தில் மஹாபலிபோலும், ப்ரஹ்லாதன்போல் பகவானிடம் பற்றுள்ளவனாகவும் இருப்பான்.
நிறைய ராஜரிஷிகளை உண்டு பண்ணுவான். கெட்ட வழியில் நடப்பவர்களை தண்டிப்பான். கலியை அடக்குவான்.
ஒரு ப்ராம்மண குமாரனின் சாபத்தால் தன் மரணத்தை அறிந்துகொண்டு, விரக்தனாகி ஹரிசரணத்தை அடைவான்
வியாசரின் பிள்ளையான சுகரிடம் கதைகேட்டு, ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்து, கங்கைக்கரையில் இவனுக்கு மோக்ஷம் கிட்டும். என்றனர். ப்ராம்மண சாபம் கிட்டும் என்றதும் சற்று கலங்கிய தர்மபுத்ரர், ஸத்சங்கம் கிட்டும், மோக்ஷத்தை அடைவான் என்றதும் ஆறுதல் அடைந்தார்.
அன்னை, 5 தாத்தாக்கள், ஏராளமான பாட்டிகள், கொள்ளுப்பாட்டியான குந்தி, அத்தனைபேரின் அரவணைப்பிலும் வெகுசீக்கிரம் வளர்ந்தான் குழந்தை.
ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்மபுத்ரர் மூன்று அச்வமேத யாகங்கள் செய்தார்.
பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக் கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த கண்ணன், தன்னால் காக்கப்பட்ட குழந்தையோடு ஆசையாய் விளையாடினான். பின்னர், மீண்டும் துவாரகை திரும்பும்போது, அர்ஜுனனை உடன் அழைத்துக்கொண்டு திரும்பினான்.
அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும் அஸ்தினாபுரத்தை எட்டவில்லை. தர்மபுத்ரர் கவலை கொள்ளத் துவங்கினார்