இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும் அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம்.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது.

தலைநகர்

                              

             நாகர்கோவில் இம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.அன்றைய நாஞ்சில் நாட்டில் பெரிய நகரமாக இருந்த நாகர்கோவில் மாவட்டத்தின் மத்தியில் இருப்பதாலும் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அமைந்திருபதாலும் நாகர்கோவில் என்ற பெருமையுடன் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

சுற்றுலா தலங்கள்

விவேகானந்தர் மண்டபம்

25-12-1892 அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர் அன்னை பகவதியை வணங்கிய பின் கடலில் தூரத்தில் தெரிந்த பாறையை கண்டு மகிழ்ந்து நீந்தி சென்று அதில் தியானத்தில் ஆழ்ந்தார்.இந்தியாவின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்கு வைத்து தான் சுவாமிக்கு உதயமானது.அதன் நினைவாக தான் சுவாமி விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும்  சிலையும் அமைக்கப்பட்டு 02-09-1970-ல் அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் ருகில் உள்ள பாறையில் விஸ்பரூபத்துடன் காட்சியளிப்பது,உலக பொதுமறையாம் திருக்குறள் 
தந்த தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை.   133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு கூறும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து 

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கும்,திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் பூம்புகார் நிறுவனத்தினரால் எம்.எல்.குகன் மற்றும் எம்.எல்.பொதிகை என்ற இரண்டு படகு மூலம் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.




காந்தியடிகள் நினைவு மண்டபம் 

தேசதந்தை அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு குமரி கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அம்மண்டபத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் விழுகிறது.இதன் மூலம் இயற்கையே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

15-01-1937-ல் காந்தியடிகள் குமரிக்கு வருகை தந்த போதுகுமரி கடலில் நீராடிய காட்சி,அன்று சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து வரவேற்பு புத்தகத்தில் தமிழில் கையெழுத்திட்டது இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.

காமராஜர் நினைவாலயம்

கருப்பு காந்தி என்றும்,கர்மவீரர் என்றும் குமரி மாவட்ட மக்களால் அப்பச்சி என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபம் 
02-10-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது.இங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு,தேசப்பற்று என பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குமரி வரலாற்றுக் கூடம்


கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் தென்புறம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம்.


இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள்,இந்த உலகத் தோற்றம்,அன்னை குமரியின் அவதாரம்,விவேகானந்தரின் வரலாறு,வைகுண்டரின் வரலாறு,புனித தாமஸ்,மகாத்மா காந்தி,விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.



சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் 

குமரி கடலில் சூரிய உதயம் காண்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.உலகில் சூரிய உதயம்,சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்ககூடிய இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று.சித்ராபவுர்ணமி அன்று சூரியன் மறைவதையும்,சந்திரன் தோன்றுவதையும் ஒரு சேர காணலாம்.இந்த அபூர்வ காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.

முக்கடலும் சங்கமிக்கும் புனித கடலில் நீராடி கதிரவனை வழிபடுவது புண்ணியமாகும்.
மகாபாரதத்தில் அர்ஜுனன் குமரியில் வந்து நீராடினான் என்று வரலாறு கூறுகிறது.
தென்னாட்டவர்கள் காசிக்கு போய் கங்கையில் குளிப்பது வழக்கம்.வடநாட்டவர்கள் குமரிக்கு வந்து குமரி கடலில் குளிப்பது வழக்கம் "கங்கை ஆடில் என்,குமரி ஆடில் என்" என்பது அப்பர் தேவாரப்பாடல்.


மருந்துவாழ்மலை

கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பொற்றையடி என்னுமிடத்தில் உள்ள மருந்துவாழ்மலை இராமாயண காலத்து வரலாறுடையது.ஆன்மீக மலையாகவும்,மூலிகை மலையாகவும் கருதப்படும் இம்மலை இங்கு வந்ததற்கு புராண பின்னணி உண்டு.இலங்கையில் சிறைவைக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக நடந்த போரில் காயம் பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளுக்காக,அனுமன் மருந்து செடிகளை கொண்டு வரச்சென்றார்.அவ்வாறு சென்ற அனுமன் மருந்து மூலிகைகளின் பெயரை மறந்து விடுகிறார்.வெறுங்கையுடன் போக கூடாது என்பதற்காக சஞ்சீவி மலையை தன் கையால் தூக்கிக்கொண்டு இலங்கைக்கு சென்ற போது,அம்மலையின் ஒரு பகுதி உடைந்து இந்த இடத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த மருந்துவாழ் மலையில் அனைத்து நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த அறிய வகை மூலிகைகள் இன்றும் உள்ளது.


இம்மலை ஆயிரத்து 800அடி உயரமுடையது. 625 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மலையில் பல்வேறு கோயில்களும்,மடங்களும் அமைந்துள்ளது.


உதயகிரி கோட்டை

தக்கலை அருகில் 93 ஏக்கர் நிலப்பரப்பில் 16 அடி உயரத்தில் கோட்டை சுவர்களால் எழுப்பப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் உதயகிரி கோட்டை ஆகும்.அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வெடிமருந்துகள் தயாரிக்கும் இடமாகவும்,போர் வீரர்களுக்கு போர் பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வந்தது.திருவிதாங்கூர் மன்னரால் சிறைபிடிக்கப்பட்ட டச்சு நாட்டு தளபதி டிலனாய் பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தான தளபதியாக நியமிக்கப்பட்டார்.அயல்நாட்டிலிருந்து வந்த அன்னியநாட்டுக்காரர் மன்னரின் விசுவாசியாக விளங்கியதால்,அவர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க  அவரது உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.அது இன்னும் வரலாற்று சின்னமாக காணப்படுகிறது.

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோட்டை தற்போது 
புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மான் பூங்கா,லவ் பேர்ட்ஸ்,சிறுவர் பூங்கா,மலை நடைப்பாதை,மயில்,நட்சத்திர ஆமை,புறாக்கள்,வெளிநாட்டு வாத்து,மீன்காட்சியகம்,குடில்கள், சறுக்கு,ஊஞ்சல் என பலவித பொழுதுபோக்கு வசதிகளுடன் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை 

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை,தக்கலையிலிருந்து 2கி.மீ. தொலைவில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இங்குள்ள கோவில் சிலைகளும்,சிற்ப கூடங்களும்,அரிய பொக்கிஷங்களும்,சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.தமிழ் நாட்டில் அமைந்திருந்தாலும் இவ்வரண்மனை கேரள அரசின் கண்காணிப்பின் கீழ்,கேரள பாரம்பரிய முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது.மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் உபயோகப் படுத்திய மூலிகை கட்டில்,வாள்,கேடயம் உட்பட பல அரிய பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தொட்டிப்பாலம் 

திருவட்டாரிலிருந்து 3கி.மீ. தொலைவில் மாத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும்.இது 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும்  உடையது.இந்த பாலம் சுமார் ரூ.13 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது,விளவங்கோடு கல்குளம் தாலுக்காக்களின் விவசாயத்தில் ஏற்பட்ட வறட்சியை போக்குவதற்காக 1966-ல் கட்டப்பட்டது.

முக்கிய கடற்கரைகள் 


திரிவேணி சங்கமம் (கன்னியாகுமரி)

வங்கக்கடல், அரபிக்கடல், இந்துமகாசமுத்திரம் ஆகிய முக்கடல்கள் ஒன்றாக சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாகும்.






வட்டக்கோட்டை கடற்கரை

குமரிமுனைக்கு கிழக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள,இந்த கற்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி டிலனாயின் உத்தரவுப்படி கட்டப்பட்ட படைத்தளமாகும்.இக்கோட்டையை சுற்றிலும் உயரமான மதில்சுவர்கள் உள்ளன.உள்ளே சென்று பார்த்தால் அலைவீசும் கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.


சங்குத்துறை கடற்கரை

நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையான சங்குத்துறை பீச் தற்போது நவீன மயமாக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா,குடில்கள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.




சொத்தவிளை கடற்கரை

நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் புத்தளம் அருகில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை.நாகர்கோவில் மக்களுக்கு இது இயற்கை அளித்த ஓர் வர பிரசாதமாகும்.








தெக்குறிச்சி கடற்கரை
                                     
மேற்கு கடற்கரையோரம் ஆரவாரமின்றி அமைதி அழகுடன் காட்சியளிக்கும் இக்க்கடற்கரை நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.கடலோரம் அமைந்துள்ள சவுக்கு மரங்களின் நிழல் பரவசமூட்டுகிறது.






முட்டம் கடற்கரை

தமிழகத்தின் அழகிய கடலோர கிராமங்களில் தனித்தன்மையோடு திகழ்வது முட்டம் கடற்கரையாகும்.இங்கு அமைந்துள்ள கலங்கரை விளக்கம் காண்போர் இதயம் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது இக்கடற்கரை.




குளச்சல் கடற்கரை

நாகர்கோவிலிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளச்சல் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும்.கி.பி 1741-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி டச்சுப்படையினருக்கும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கும் இங்கு நடந்த போரில்,மன்னர் வெற்றி வாகை சூடி டச்சுப்படையை சேர்ந்த சிலரை கைதியாக சிறைபிடித்தார்.அவர்களில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிலனாய் மிகத்திறமையான போர் வீரர் என்பதை அறிந்த மன்னர்,அவரை மன்னித்து தனது படைத்தளபதியாக நியமித்தார்.இங்கு மன்னரின் வெற்றியை நினைவு படுத்தும் வகையில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது.வரலாற்றுப் புகழ்பெற்ற இத்துறைமுகம் விரைவில் சர்வதேச துறைமுகமாக மாற இருக்கிறது.


தேங்காய்ப்பட்டினம் கடற்கரை

பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ள இக்கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்க காட்சியளிக்கிறது.மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.



தொடரும்....