லக்கி டிரா… உஷார்!


மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் ‘ஐ.டி’யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.

அலைபேசியில் உள்ள ‘ப்ளூ டூத்’ வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் ‘ஆஃப்’ செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.
டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன. 
தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, ‘லக்கி டிரா… உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. ‘வேலை வாங்கித் தருகிறோம்… கடன் தருகிறோம்… தொழில்கற்றுத் தருகிறோம்…’ என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்… உஷார்.
ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் ‘ஃபிஷிங்’ வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமே… முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.

Close Menu